Wednesday, September 29, 2010

ராமர் பிள்ளையும் மூலிகை பெட்ரோலும்: நடந்தது என்ன?


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் அப்போதைய முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, கலைஞர் முன்னிலையில் அதைச் செய்து காட்டி அனைவரையும் வியக்கவும் வைத்தார். ஆனால் IIT-யில் விஞ்ஞானிகள் முன்பு அவர் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்துக் காண்பித்தபோது விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு பல விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மீடியாக்களின் தயவால், ஒரு பட்டிக்காட்டு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் படித்த விஞ்ஞானிகள் புறக்கணிக்கிறார்கள் என்று மக்களும் அரசாங்கமும் நம்ப வைக்கப்பட்டார்கள். இதன் பின்பு மாநில அரசுகளிடமும் மக்களிடமும் கிடைத்த ஆதரவை வைத்து ராமர் பிள்ளை மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்று வந்தார். 2000-ம் ஆண்டில் இரசயானங்களை மூலிகைப் பெட்ரோல் என்று சொல்லி விற்பதாக ராமர் பிள்ளையைக் கைது செய்தது CBI. இது கதைச் சுருக்கம்.

இப்போது கொஞ்சம் விரிவாக நடந்தது என்ன என்று பார்ப்போமா?

ஆரம்பத்தில் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ராமர் பிள்ளைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆதரவளித்தது. அது சென்னை IIT- க்கு ராமர் பிள்ளைக்கு ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் முன்பு மூலிகைப் பெட்ரோல் செய்துகாட்ட உதவுமாறு அறிவுறுத்தியது. ராம்ர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சென்னை IIT-யின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பரிசோதனை செய்ய்ப்பட்டது. அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.

பின்னர் ராமர்பிள்ளை சென்னை IIT யில் மூலிகையை வைத்துத் தண்ணீரைப் பெட்ரோலாக மாற்றும் பரிசோதனையை விஞ்ஞானிகளுக்கு முன்பு செய்துகாட்டினார். அங்குதான் பிரச்சனை தொடங்கியது. பரிசோதனைக்குத் தேவையான பாத்திரங்கள் IIT ஆய்வகத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. அனைத்து பொருட்களும் எடை போடப்பட்டது. கலக்குவதற்காக கிளாஸ் குச்சி (ஆய்வகங்களில் வழமையாகப் பயன்படுத்தப்படுவது) கொடுப்பட்டது. ராமர் பிள்ளையும் 45 நிமிடங்கள் வரை கலக்கியும் பெட்ரோல் உருவாகவில்லை. பின்னர், தான் கொண்டுவந்திருந்த உலோகத்திலான குச்சியைக் கொண்டு கலக்கினார் ராமர் பிள்ளை. 5 நிமிடங்களில் அந்தக் குச்சியிலிருந்து கெரோசின் வாடையுடன் ஏதோ திரவம் வரத்தொடங்கியது. அந்தக் குச்சியை மீண்டும் எடை போட்டுப் பார்த்த போது அது 28.68 gm குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஞ்ஞானிகள் மூலிகை பெட்ரோல் அந்தக் குச்சியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.

இதற்கு ராமர் பிள்ளையால் விளக்கம் சொல்ல முடியவில்லை. மறுபடியும் செய்துகாட்டசொல்லி விஞ்ஞானிகள் கேட்டபோது, போதுமான அளவு மூலிகைகள் கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டார் ராமர் பிள்ளை. இவ்வாறு ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சோதனை தோல்வியில் முடிந்தது. பின்னர் IIT மறுபடியும் ராமர்பிள்ளையை அழைத்தபோது தனக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் செய்துகாட்ட முடியும் என்று கூறிவிட்டார்.

ஆனால் விஞ்ஞானிகள் வேண்டுமென்றே ராமர் பிள்ளையை நிராகரிப்பதாகவே மீடியாக்களும் பொதுமக்களும் கருதினார்கள். விளைவு? ராமர் பிள்ளை வெற்றிகரமாக (?) மூலிகைப் பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார் (அதன் பின்புலங்களையும் பினாமிகளையும் இங்கு பார்க்கலாம்). மூலிகைப் பெட்ரோல் விற்பனை சில வருடங்கள் சத்தமில்லாமல் நடந்தது. ராமர் பிள்ளை சென்னை IIT யில் நடந்ததை மறந்து விட்டார், ஆனால் CBI மறக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் கைது செய்துவிட்டார்கள்.

அப்படி என்னதான் செய்தார் ராமர் பிள்ளை? இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார். (இங்கே கவனிக்க: இந்த பென்சீன் மற்றும் டொலுவீன் எனும் இரசாயனங்கள் பயங்கரமாகப் பற்றி எரியும் தன்மை உடையவை. பெட்ரோலை விட அதிகம் எரியும் சக்தி கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் எனபது நினைவிருக்கலாம். அந்த டேங்கர் லாரி ஏற்றி வந்தது பென்சீன் என்னும் திரவமே). CBI ஆட்கள், ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலை சாதாரண மனிதர்கள் போல வந்து வாங்கிச் சென்று லேபுகளில் சோதனை செய்த போது இந்த இரசாயனங்கள் இருப்பது தெரிய வந்தது (லேபில், GC-MS எனப்படும் கருவியில் இது பரிசோதிக்கப்பட்டது). பின்பு அவருடைய நடமாட்டங்கள், தகவல் தொடர்புகளை கிளறிய CBI இந்த ரசாயனங்கள் எங்கிருந்து ராமர்பிள்ளைக்கு கிடைக்கின்றன, யார் யார் உதவுகிறார்கள் என்று கண்டுபிடித்தது. ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலும் முடிவுக்கு வந்தது.

இப்படி ஒரு சின்ன உலோகக் குச்சியில் இரசாயனங்களை ஒளித்து வைத்துக் கொண்டு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மீடியாக்கள், பொதுமக்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் ராமர் பிள்ளை! அவருடைய அப்பாவி கிராமத்தான் தோற்றம் வேறு அதற்கு மிக உதவியாக இருந்தது. இவரை இன்னும் நம்புபவர்கள் வேறு இருக்கிறார்கள்! இதுபோன்ற விஷயங்களில் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.

இப்போது மறுபடியும் ராமர் பிள்ளை கிளம்பி வந்திருக்கிறார். அக்டோபர் 2-ம் தேதி மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல் நீரைப் பெட்ரோலாக்குவேன்னு சவால் விட்டிருக்கிறார், என்ன நடக்குதுன்னுதான் பார்ப்போமே?

1 comments:

arulmozhivarman said...

எழுதலாம் என்று எழுதியுள்ளீர்கள் அவருக்கு எப்படி டொலுவின்,பென்சின் பற்றி தெரியும் அவரின் முயற்ச்சியை முறியடிப்பது ஏன் பெட்ரோலிய பகாசுர கம்பெனிகளாக இருக்காது..யோசிங்க சார் இந்திய ஒரு பெட்ரோலியகம்பெனியின் 1 வருட லாபம் 6500 கோடிக்கு மேல்